கிருஷ்ணவேணி பஞ்சாலை
'பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ளுமே பக்கத்தில்
வைத்தால்...' அப்படி பஞ்சும் நெருப்பும் சேர்ந்து பஞ்சாலையையே கொளுத்தப்
போகிறது என்று நினைத்து படம் பார்ப்பவர்களுக்கு செமத்தியான ஜர்க். சம்பள
உயர்வு, போனஸ், ஸ்டிரைக், என்று வேறு திசையில் நகர்கிறது படம். ஆசை
ஒன்றாகவும் அடைவது இன்னொன்றாகவுமே இருக்கிறது சில புது இயக்குனர்களின்
அட்டம்ட். தனபால் பத்மநாபனும் அந்த சாபத்திற்கு தப்பவில்லை.
முதல் ஐந்து நிமிடங்களில்
அப்படியொரு பிரமிப்பு. பழங்கால பெரிசுகளின் கோபமும், முடிவும்
எப்படியிருக்கும் என்பதை அந்த ஒரு முதலாளியின் துப்பாக்கி டுமீலில்
சொல்லிவிடுகிறார் தனபால். 'ஃபாரின்லேர்ந்து என் புள்ளை வரணும். என் மில்லை
அவன்தான் நடத்தணும்' என்று செத்துப்போகும் கிழவரின் ஆத்மா சாந்தியடைகிற
அளவுக்கு மகன் மில்லை நடத்துகிறாரா என்ற பெருங்கேள்வியுடன் நகர்கிறது படம்.
டீன் ஏஜ்கள் திரியும் மில்.
அங்கே திகட்ட திகட்ட வழிகிறது ஜொள். அதிலும் மேனேஜர் சண்முகராஜா கையில்
சாக்லெட்டும், கண்ணில் கட்லெட்டுமாக பிள்ளைகளை 'வளைக்க' போராடுகிறார்.
இங்கேதான் தன் நிஜக் காதலை காப்பாற்றிக் கொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது
நந்தனாவுக்கு. (பொண்ணு அழகுன்னு ஒரு வரியில சொன்னா ஏழேழு ஜென்மத்துக்கும்
நம்மை பாவம் துரத்தும். அப்படி வெறித்தனமாக து£ண்டில் போட்டு, இரை
முழுங்குது இவரது எல்லா அம்சங்களும்)
ஜாதி வெறி பிடித்த அம்மா
கையால்தான் தன் அக்கா கொலை செய்யப்பட்டாள் என்பதையே அப்புறம்தான் புரிந்து
கொள்கிறார் நந்தனா. அம்மாவையும் அதே ஜாதி வெறிக்கு பலி கொடுத்துவிட்டு
நகரத்தை நோக்கி நகரும் நந்தனா, தனது காதலனுடன் மறுபடியும் ஊர்
திரும்பும்போது நடைபெறும் நிகழ்வுகள்தான் க்ளைமாக்ஸ். இடையில் மில்
ஸ்டிரைக், ஊழியர்களின் போராட்டம், வறுமை என்று காதருகில் சங்கு
ஊதுகிறார்கள். இருந்தாலும், தொழிலாளி வர்க்கம் தன் தலையில் தானே மண்ணள்ளி
போட்டுக் கொள்வதை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்லவே முடியாது. அதிலும்
வசனங்களில் அப்படியொரு கூர்மை.
'சில வரலாற்று தோல்விகளை
ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டதுதான் நம்ம இயக்கம்' என்று அந்த தோழர்
சொல்கிறபோது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.
வசந்த் அண்கோ விஜய்யை
ஜெராக்ஸ் எடுத்ததை போல இருக்கிறார் ஹீரோ ஹேமச்சந்திரன். அவருக்கே
வேலையில்லையாம், அதில் இவர் வேறு... இவருடைய தோழர்களாக நடித்திருக்கிற
எவரும் மனதில் ஒட்டவில்லை, அஜயன் பாலாவை தவிர. கடைசியில் ஜோதிடராக
மாறிவிடும் அஜயனின் முடிவு வெகு யதார்த்தம்!
எந்நேரமும் ஒரு அஜீரண
அவஸ்தையோடு இருக்கிறார் ரேணுகா. மகளின் ஜாதி மாறிய காதலுக்கு பிறகு
அப்படியானார் என்றால் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. இங்கே அதுவும் இல்லையே?
நம்மை ஒரேயடியாக
வசீகரித்துக் கொள்கின்றன எல்லா பாடல்களும். ஆலைக்காரி பஞ்சாலைக்காரியில்
புதைந்து போகிற நாம், பின்னாலேயே வரும் ஆத்தாடி... க்கு அடிமையாகிப்
போகிறோம். ரஹ்நந்தன் இசை வாழ்க.
பகல் காட்சிகளை கூட நைட் எபெக்டில் எடுத்து சோதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
காதல் ரிலீசுக்கு பிறகு
சுமார் ஒரு டசன் பரத்-கள் 'ஞே ஞே' என்று தலையை சொறிந்து கொள்கிற
க்ளைமாக்ஸ்கள் கோடம்பாக்கத்தை குதறி எடுத்திருக்கின்றன. அந்த வரிசையில்
இந்த படத்திலும் ஒரு மாரியம்மாள். சே, போங்கப்பா...
தமிழ்சினிமா இதுவரை காணாத
களம் இந்த பஞ்சாலை. அழகான பஞ்சைக் கொண்டு புடவை செய்வார்கள் என்று
எதிர்பார்த்துப் போனால், மொத்தமாய் பெருக்கி அள்ளி தலையணைக்குள்
திணித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment