Friday, June 15, 2012

பொற்கொடி பத்தாம் வகுப்பு

போர்க்கொடி 10ம் வகுப்பு
காதல், வழக்கு எண் 18/9 மாதிரி ஸ்கூல் காதலை மையமாக கொண்ட படம்தான் இது. ஆனால் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை, காக்கைக்கேற்ற பொரி உருண்டை சைஸ்தான் இப்படமும், பட்ஜெட்டும்.
ஸ்கூலில் கிடைக்கும் சத்துணவை சாப்பிடாமல் அதை தன் அம்மாவுக்கு எடுத்துச் செல்லும் மாணவி ஒருத்திக்கும், அம்மாவே இல்£த அநாதை மாணவன் ஒருவனுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்புதான் இப்படத்தின் நகர்வு. மதுபானக்கடை என்ற தலைப்பிலேயே ஒரு படம் விரைவில் வரப்போகும் நிலையில், மதுவுக்கு முற்றிலும் எதிரான படம் இது. 'அட... குடிகாரப் பாவிகளா, வௌங்குவீங்களா நீங்க?' என்கிற ஆத்திரம் வழிகிறது இப்படத்தில்.
நகர்புறம், கிராமம் என்று எல்லா ஏரியாவிலும் தன் கூர்மையான அலகால் வருங்கால சந்ததிகளை கொத்திப்பிடுங்கும் கழுகான மதுவையும் அதன் அரக்கத் தனத்தையும் சித்தரிக்கும் படம். காதலுடன் கருத்தையும் திணித்திருக்கும் புது இயக்குனர் பழ.சுரேஷுக்கு மானசீகமாக ஒரு வணக்கம்.
பேசாமலே பேசுகிறார் பொற்கொடி. கண்களிலும் இதழ்களிலும் வழிகிற சோகத்தை மீறி அவர் எப்படியிருப்பார் என்கிற ஆவலை அவ்வப்போது பூர்த்தி செய்கின்றன அழகான பாடல்களும் காட்சிகளும். அதற்காக ஒரு பெண் எந்நேரமும் சோகம் வழிய திரிவது நன்றாகவா இருக்கிறது? நல்லவேளை, கனவுக்காட்சிகளில் சிரிக்கிறார், அழகாகவும் இருக்கிறார்.
பள்ளிக்கூட காதல் எப்படியிருக்கும்? ஐ லவ் யூ சொல்வதற்குள் நாலு பரீட்சை கிராஸ் ஆகிவிடும் போல. எப்படியோ மென்று முழுங்கி இவர் ஐ லவ் யூ சொல்ல, பொற்கொடி போர்க்கொடி உயர்த்தாமல் மவுனமாக சென்றுவிடுகிறார். அப்புறம் அவரை நினைத்து இவர் ஏங்குவதும், பொற்கொடியை காப்பாற்ற போராடுவதுமாக ஒரே டிராஜடிகள்... விசும்பல்கள்...
வறுமை தாண்டவமாடும் குடும்பத்தில் ஒரு அம்மா எப்படியிருப்பாள்? அந்த இடத்தில் ஸ்லிப்பாகி விழுந்திருக்கிறார் இயக்குனர். கருத்தம்மா ராஜஸ்ரீயும், அவரது திணவெடுத்த பாடி லாங்குவேஜும் எந்தவித பச்சாதாபத்தையும் ஏற்படுத்தவில்லையே பிரதர்.
பாலாசிங்தான் வில்லன். கொடுத்த காசுக்கு போனசாக கற்பழிப்பு காட்சி ஒன்றும் இருக்கிறது. மஞ்சு விரட்டுகிறார் மனிதர்.
அப்புறம் தாடி மற்றும் தாறுமாறான தலைமுடியுடன் ஒரு ஒல்லி ஆசாமி சிரிப்பு மூட்ட ட்ரை பண்ணுகிறார். எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
வாங்கிய சம்பளத்தையெல்லாம் ஆர்மோனிய பொட்டிக்கே அர்ப்பணித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஓவியன். இதே பாடல்கள் பெரிய இயக்குனர்களின் படங்களில் இடம் பெற்றிருந்தால் ஓவியனை உசத்தி பிடித்திருக்கும் கோடம்பாக்கம்.
அன்பும் அரவணைப்பும் கிராமங்களில்தான் மிச்சமிருக்கிறது என்கிற குறைந்தபட்ச ஆறுதலையும் நம்பிக்கையையும் குதறிப் போடுகிறார்கள் படம் முழுக்க.
கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பொற்கொடி பத்தாம் வகுப்பை தாண்டியிருப்பாள்...

No comments:

Post a Comment